கோட்டூர் புறத்தில் துவங்கப்பட்டுள்ள நூலகத்திற்கு செல்ல வேண்டும் என்று
எண்ணிக்கொண்டிருக்கிறேன் .மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது .சாலையில் செல்லும்போதே வியக்க வைக்கிறது .உண்மையிலேயே நல்ல விஷயம்தான் .
400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. தலைமுறைகளை கடந்தும் நிலைத்து நிற்கும்.
இதே போல தமிழை வளர்கிறேன் என்று சொல்லி 200 கோடிக்கு மேல் செலவு செய்து நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு ஆட்சியாளர்களின் புகழ் பாட பயன்பட்டதே தவிர புண்ணியம் ஏதும் இல்லை .அதே பணத்தை வைத்து கோட்டூர் புரம் நூலகம் போல் தமிழ் மொழிகென தனி நூலகம் அமைத்து இருந்தால் காலம் கடந்து நின்றிருக்கும் .தனியொரு மொழிக்கென இப்படியொரு நூலகம் அமைத்திருந்தால் உலகம் முழுதும் வியந்து கொண்டாடியிருக்கும் .தமிழ் ஆராய்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய
மைல் கல்லாக இருந்திருக்கும்.
ஒளி வேண்டும் என்றால் ஒரு விளக்கு வாங்குங்கள் . நீங்கள் பட்டாசு வாங்குகிறீர்கள் ,
அது நிரந்தர ஒளியை தராது .
சமிபத்தில் இணையத்தில் "மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்" (http://pm.tamil.net/) பார்த்தேன் .உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய முயற்சி . தமிழ் இலக்கியங்களை பதிவு செய்துள்ளதோடு இலவசமாகவும் தருகிறார்கள் . அதிகம் இணைய அறிமுகமில்லாத தமிழ் ஆர்வமுள்ள என் நண்பர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் நான் பரிந்துரை செய்தேன் .
இது போன்ற ஆக்கப்பூர்வ முயற்சிகள் தொடர்ந்தால்
" தமிழ் இனி மெல்ல வாழும் "

No comments:
Post a Comment